சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி அமைச்சர் ஒருவர் கூட அஞ்சலி செலுத்தவில்லை: அதிமுக விமர்சனம்

சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி அமைச்சர் ஒருவர் கூட அஞ்சலி செலுத்தவில்லை: அதிமுக விமர்சனம்
Updated on
1 min read

புதுச்சேரி: “தேசிய அளவில் நெஞ்சை உலுக்கிய சம்பவமான புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமி உடலுக்கு புதுச்சேரி அரசில் இருந்து ஒரு அமைச்சர்கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. இவர்களை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை” என்று அதிமுக விமர்சித்துள்ளது.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: “போதைப்பொருள் ஆசாமிகளால் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் குறைபட்ச மனிதாபிமானத்தை இழந்து நடந்து கொண்டது தவறான ஒன்றாகும். வெகுதொலைவில் இருந்து, நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்த முடியாத அதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநில தலைவர்களும் தங்கள் கண்டனத்தையம், இரங்கலையும் தெரிவித்திருந்தார்கள்.

தேசிய அளவில் நெஞ்சை உலுக்கிய சம்பவத்தில் சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி அரசில் இருந்து ஓர் அமைச்சர் கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது பற்றி இவர்களை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. அனைத்து பிரச்சினைகளிலும் ஆளுநருடன் கலந்து கொள்ளும் சட்டப்பேரவை தலைவரோ அல்லது அரசின் சார்பில் குறைந்தபட்சம் மாவட்ட ஆட்சியர் உள்ளவர்கள்கூட ஒரு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த வரவில்லை.

இந்த விஷயத்தில் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த துணைநிலை ஆளுநரை திட்டமிட்டு அவமரியாதை செய்த சில கட்சியினரும், அமைப்பினரும் செய்தது தவறான ஒன்றாகும். காலம் கடத்தாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அரசு பெற்றுத் தர வேண்டும்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழங்கும் தண்டனை போதுமானதுமில்லை என்றும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதன்படி குற்றவாளிகளுக்கு காலம் தாழத்தாமல் உரிய விசாரணை நடத்தி மரண தண்டனை வழங்க வேண்டும்.

குழந்தை படுகொலைக்கு நீதி கேட்டும், புதுச்சேரியில் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் விற்பனைக்கு துணை சென்று, அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆளும் புதுச்சேரி அரசை கண்டித்தும், அதிமுக சார்பில் நடைபெற இருக்கும் முழு கதவடைப்பு பந்த் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in