

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகிவந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கமலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் நேரடியாக செல்வதால் தொகுதி பங்கீடு இன்றே இறுதியாகவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.