Published : 06 Mar 2024 07:08 PM
Last Updated : 06 Mar 2024 07:08 PM
புதுச்சேரியில் சிறுமி கொலை: மக்கள் கொந்தளிப்பு:புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது விரைவு நடவடிக்கை கோரி பொதுமக்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியின் பல இடங்களிலும் புதன்கிழமை கொந்தளிப்பான இந்த மக்கள் போராட்டம் நடந்தது.
முதல்வர் ரங்கசாமியை முற்றுகையிட்டது, கடலில் இறங்கி இளைஞர்கள் போராடியது என பல வடிவங்களில் போராட்டம் நடந்தததால் புதுச்சேரி நகர் முழுவதுமே பதற்றம் நிலவியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படையை அழைக்கப்பட்டது.
இதனிடையே, பிரேத பரிசோதனை முடிந்த சிறுமியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுக்க, முதல்வர் ரங்கசாமி அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின்னேரே சிறுமியின் உடலை பெற்றுக்கொண்டனர். சிறுமியின் பெற்றோருக்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 9 வயது மகளை கருணாஸ் என்ற 19 வயது இளைஞரும், விவேகானந்தன் என்று 59 வயது முதியவரும் சிறுமியை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
“வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் இருவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட, இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழவும், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த இரண்டு பேரும் சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டியதோடு, உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டுள்ளனர்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசு மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு: போதைப் பொருள்களைத் தடுக்க ஓரிரு நாட்களில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என புதுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும், சிறுமி கடத்தப்பட்டு கொலையான சம்பவத்தில் அரசு மவுனம் காப்பதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
சனாதன சர்ச்சை: வழக்குகளை முடித்து வைத்த ஐகோர்ட்: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி.ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
“பிரதமர் இப்படியா பொய்களைச் சொல்வது?” - முதல்வர் ஸ்டாலின்: ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்” என்றார்.
மேலும், “சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.
இரண்டு, மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு ஒரு ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்” - இபிஎஸ் விமர்சனம்: 'நீங்கள் நலமா' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " 'நீங்கள் நலமா' என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!. விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!. நாங்க நலமா இல்லை ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளார்.
பாஜக - சமக கூட்டணி: சரத்குமார் அறிவிப்பு: வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
“அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்கும் 2024 தேர்தல்” - அமித் ஷா: "இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் தேர்தல் நடக்க உள்ளது. இது, அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை!: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார். மேலும் 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தும் அடிக்கலும் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது, மாணவர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியிலான இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, "சந்தேஷ்காலியில் நடந்த அனைத்தும் வெட்கக் கேடானவை. சந்தேஷ்காலி புயல் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளையும் சென்றடையும்” என்று மேற்கு வங்கத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசினார்.
‘மீண்டும் அமேதியில் ராகுல் காந்தி போட்டி’: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘உக்ரைன் போரில் ஈடுபட இந்தியர்களுக்கு மீண்டும் நிர்பந்தம்’: ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள், தங்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT