Published : 06 Mar 2024 12:36 PM
Last Updated : 06 Mar 2024 12:36 PM

“பிரதமர் இப்படியா பொய்களைச் சொல்வது?” - முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: "வெள்ள நிவாரணமாக ரூ.37,000 கோடி நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அதில், "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டம்.

புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.

மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் என இப்படி, தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது திராவிட மாடல் அரசு.

எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டன. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால், இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை. மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணா, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன். அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், “நீங்கள் நலமா?” என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும். நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான். அதேசமயம், மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம். இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?

மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்ட மக்களுக்காக, மாநில பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு. உங்கள் ஒவ்வொருவர் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x