Published : 05 Mar 2024 05:26 AM
Last Updated : 05 Mar 2024 05:26 AM
சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4,027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை போன்றவை அதிகமுள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ளது. அதனால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது.
அதன்படி, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதல்கட்டமாக புற்றுநோய் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 6.07 லட்சம் பெண்களுக்கு மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.33 லட்சம் நபர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றான.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 69,000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தததில், 1,372 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், 52,000 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 2,655 பேருக்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்ட 4,027 பேருக்கு முதல்கட்ட சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்க முடியும். அதனால், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT