ஓசூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விற்பனை: நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஓசூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விற்பனை: நடவடிக்கை எடுக்க பரிந்துரை
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனை பிரசவவார்டில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, மருத்துவமனை உதவியாளர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்படும் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருந்தால், அதிகம் பால் சுரக்கும்பெண்களிடமிருந்து மருத்துவமனை செவிலியர்கள் தாய்ப்பாலை பெற்று தாய்ப்பால் சுரப்பு இல்லாத பெண்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவது வழக்கம்.

ஆனால், இதை மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள் சிலர் முறைகேடாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பிரசவித்த தாய்மார்களிடம் தாய்ப்பாலை இலவசமாகப் பெற்று விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. உள் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம்கேட்டு தொல்லை செய்கின்றனர். பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் பெறப்படுகிறது.

இதேபோல், அதிகம் பால் சுரக்கும் தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை இலவசமாகப் பெற்று ரூ.400-க்கு விற்பனை செய்வதும் நடந்து வருகிறது. எனவே, தாய்ப்பாலை விற்பனை செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, “மருத்துவமனையில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக புகார் வந்தது.அதன்பேரில் மருத்துவ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

இதில், உதவியாளர்கள் வாசுகி.எல்லம்மாள் ஆகியோர் தாய்ப்பாலை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in