“ஊழல்வாதிகளுக்கு எச்சரிக்கை” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முத்தரசன் வரவேற்பு

முத்தரசன்
முத்தரசன்
Updated on
1 min read

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் பணம் பெற்று வாக்களித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகளாக செயல்படும் உறுப்பினர்கள் கேள்வி கேட்கவோ, பேசவோ அல்லது வாக்களிக்கவோ, பணம் பெற்றுக் கொண்டு செயல்பட்டால் அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தண்டனைக்குரிய குற்றச் செயல் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதோடு, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் பணம் பெற்று வாக்களித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்ற போது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் லஞ்சம் பெற்று வாக்களித்தார்கள் என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு ஊழலை கட்டுப்படுத்தும் உறுதி வாய்ந்ததாக அமையவில்லை என்பதால், அந்த தீர்ப்பை தற்போது தலைமை நீதிபதி உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிமன்றம் ஒரு மனதாக ரத்து செய்து, பொது வாழ்வில் ஊழலை தடுக்கும் வகையில் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஜனநாயகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் பொதுவாழ்வு கரைபட்டும், சீரழிந்தும் வரும் சூழலில் வழங்கியுள்ள தீர்ப்பு ஊழலை எதிர்த்து போராடி வருவோருக்கு ஊக்கமூட்டும்.

ஊழல்வாதிகளுக்கும், சுயநல ஆதாயம் தேடும் மலிவான மனிதர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in