மலையாள படங்களில் தமிழ்க் கதாபாத்திரங்கள் - ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சர்ச்சையும், ஒரு மாற்றுப் பார்வையும்

மலையாள படங்களில் தமிழ்க் கதாபாத்திரங்கள் - ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சர்ச்சையும், ஒரு மாற்றுப் பார்வையும்
Updated on
2 min read

சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாளத் திரைப்படத்தை வைத்து சில விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழர்கள் இந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் விதம் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக தமிழர்கள் தவறாகவே மலையாளத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதாக பொதுவான கருத்து சில காலங்களாக இருந்துவரும் நிலையில், ‘தமிழர்கள் தவறாக மட்டும்தான் மலையாளத் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார்களா?’ என பார்க்கலாம்.

நிலவியல் அடிப்படையில் பார்த்தால், நாகர்கோவில், தென்காசி, கம்பம், போடி, பொள்ளாச்சி, கோவை என தெற்கில் இருந்து வடக்கு வரை கணிசமாக தமிழ் நிலத்துடன் சாலை மார்க்கமாக, தொழில், சுற்றுலா ரீதியில் தொடர்பில் இருக்கும் மாநிலம் கேரளா. ஓரளவு இந்த எல்லைப் பகுதிகளில் நீடித்த உறவு இரு மாநில மக்களுக்கும் இடையே நீடிக்கிறது. உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும் மலையாளிகள் அதிகம் இடம்பெயரும் மாநிலங்களில் தமிழகமும் முக்கியமான ஒன்று.

பிற மாநிலத்தவரை விட தமிழர்கள் அதிகம் அவர்கள் திரைப்படங்களில் காட்டப்படுவதும் அதனால்தான். சில கதாபாத்திரங்கள் எதிர்மறையாகவோ, இழிவாகவோ காட்டப்பட்டு இருப்பதும் உண்மைதான். சில இடங்களில் திரைப்படத்தை எழுதியவருக்கோ, இயக்கியவருக்கோ எதிர்மறை எண்ணங்கள் இருந்து இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த மலையாள திரைத்துறையோ, சமூகமோ தமிழகத்தை இழிவு செய்கிறார்கள் என நினைப்பது சரியா எனத் தெரியவில்லை.

கேரள மக்களை தவறாக சித்தரித்து இருக்கும் தமிழ்த் திரைப்படங்களை ஆராய்ந்து நாமும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. மலையாள திரைப்படங்களில் நல்ல விதமாக சித்தரிக்கப்பட்ட சில தமிழ்க் கதாபாத்திரங்களை சுட்டிக்காட்டுவதே நோக்கம்.

1987-ல் வெளிவந்த ‘நியூ டெல்லி’ திரைப்படத்தில் ‘சேலம் விஷ்ணு’ என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டிக்கு உதவும் நபராக தியாகராஜன் நடித்து இருப்பார். விமர்சன ரீதியாகவும், வசூலிலும் நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம். அதனால், விஷ்ணுவின் முன்கதையை ‘சேலம் விஷ்ணு’ என்ற பெயரில் திரைப்படமாக தமிழில் 1990-ல் இயக்கி நடித்து இருப்பார் தியாகராஜன். ‘காலாபானி’ (1996) திரைப்படத்தில் பிரபு ஆங்கிலேயர்களை எதிர்த்து அதனால் வந்த பிரச்சினையால், அந்தமான் சிறையில் மோகன்லாலுடன் இருப்பார். தேசப்பற்றுள்ள, கோபக்கார இளைஞராக நடித்து இருப்பார். இந்த இரண்டு உதாரணங்களும் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் நல்ல கதாபாத்திரங்கள்.

இனி, கடந்த பத்து ஆண்டுகளில் வந்த சில உதாரணங்களைப் பார்க்கலாம்: ‘உஸ்தாத் ஹோட்டல்’ (2012) திரைப்படத்தில் கரீம் இக்கா (திலகன்) ‘என் பேரன் பைசலுக்கு (துல்கர் சல்மான்) தான் எப்படி சமைக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து இருப்பதாகவும், ஏன் சமைக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்லித்தர வேண்டும்’ என்று மதுரையில் இருக்கும் நாராயணன் கிருஷ்ணனிடம் (ஜெயப்பிரகாஷ்) அனுப்பி வைப்பார். மதுரையில் அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் மூலம் பணக்காரர்களுக்கு ருசியான உணவு அளிப்பதை விட, எளிய மக்களின் பசி போக்கும் பணியே சிறந்தது என்ற முடிவுக்கு பைசல் வருவார்.

‘நார்த் 24 காதம்’ (2013) திரைப்படத்தில் ஹர்த்தால் அன்று பயணிக்க வழியின்றி நடுவழியில் தவிக்கும் ஹரிகிருஷ்ணன் (ஃபகத் பாசில்), கோபாலன் (நெடுமுடி வேணு), நாராயணி (சுவாதி) ஆகியோருக்கு உதவும் தமிழராக, கனிவான மனிதராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரேம்ஜி அமரன் நடித்து இருப்பார். சிடுமூஞ்சியாக, தனக்குள்ளேயே ஒடுங்கி, பிறரிடமிருந்து ஒதுங்கி வாழும் வசதியான இளைஞன் பாசிலுக்கு இந்தப் பயணத்தில் ஏற்படும் மன மாற்றத்துக்கு காரணமான சிலரில் பிரேம்ஜியும் ஒருவர்.

பலரின் இதயம் கவர்ந்த ‘பிரேமம்’ (2015) மலர் டீச்சர் (சாய் பல்லவி) தமிழர்தான். இருந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத அவரது உறவினர் அறிவழகன் (ஆனந்த் நாக்) கதாபாத்திரம் விசாலமான பார்வை உள்ள மனிதராக போகிற போக்கில் காட்டப்பட்டு இருப்பார்.

‘ஜோமோன்டே சுவிசேஷங்கள்’ (2017) திரைப்படத்தில் வசதியாக இருந்து தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் திருப்பூருக்கு பிழைக்கச் செல்லும் வின்சென்ட் (முகேஷ்), அவரது மகன் ஜோமோன் (துல்கர் சல்மான்), கொஞ்சம் கொஞ்சமாக சிரமப்பட்டு வாழ்க்கையில் மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு தொழிலில் உதவும் தமிழர்களாக வைதேகி (ஐஸ்வர்யா ராஜேஷ்), அவர் தந்தை பெருமாள் (மனோ பாலா) வருவார்கள்.

‘கும்பலங்கி நைட்ஸ்’ (2019) திரைப்படத்தில் பிழைக்கச் சென்ற இடத்தில் தனக்கு உதவிய ஷாஜி (சௌபின் சாகிர்), தன்னை பணத்துக்காக சுரண்டினாலும் அதை சகித்துக் கொண்டு பொறுமையாக அவருக்கு அவர் செய்யும் தவறை புரிய முற்படும் நல்ல நண்பன் முருகன் (ரமேஷ் திலக்), அவர் மனைவி (ஷீலா ராஜ்குமார் ) தமிழராக நடித்து இருப்பார்கள். முருகன் இறந்த பிறகு, அவர் மனைவியை சகோதரியாக ஏற்றுக் கொண்டு ஷாஜியின் சகோதரர்கள் வீட்டில் அடைக்கலம் அளிப்பர்.

கடந்த ஆண்டு வெளியான ‘ஹ்ருதயம்’ திரைப்படத்தில் பெருவாரியான காட்சிகள் கதைப்படி சென்னையில் நிகழும். நாயகன் அருண் நன்கு படிக்கவும், ஒரு மனிதனாக மேம்படவும் உதவும் லட்சிய இளைஞராக செல்வா என்ற தமிழ் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். சென்னையின் மீது பல மலையாளிகளுக்கு இருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே இத்திரைப்பட காட்சிகள் சில இருக்கும். இப்படி நல்ல உதாரணங்களையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆக, தமிழர்கள் மலையாளத் திரைப்படங்களில் தவறாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை என்பது தெளிவு.

- இரா.வினோத் பாபு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in