

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக, காங்கிரஸ், பாஜக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிய நிலை யில் அதிமுக மவுனம் காத்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட மீண்டும் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக துண்டுப் பிர சுரங்களை வழங்கி வருகின்றனர்.
திமுகவினர் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.
அதேபோல் பாஜகவினர் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் சேரவுள்ள அமமுகவினர் சிவகங்கை தொகுதி தங்களுக்குத்தான் என்று கூறி சின்னங்கள் அடங்கிய பேனர்களை சுவர்களில் ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி சிவகங்கை வேட்பாளராக எழிலரசி விசயேந்திரனை அறி வித்துவிட்டது. இதையடுத்து அக்கட்சியினர் வீடு, வீடாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், சிவகங்கை தொகுதி யில் அதிமுக போட்டியிட உள்ள தாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சியினர் பிரச்சாரம் செய்யாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
வேட்பாளர் அறி விக்காததால் யார் செலவழிப்பது என்ற குழப்பத்தில் பிரச்சாரத்தைத் தொடங்காமல் உள்ளனர் என கூறப்படுகிறது. இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நிலை உள்ளது. வேட்பாளர் அறிவித்த பின்பு பிரச்சாரம் செய்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் காத்திருக்கிறோம் என்று கூறினர்.