Last Updated : 03 Feb, 2018 09:56 AM

 

Published : 03 Feb 2018 09:56 AM
Last Updated : 03 Feb 2018 09:56 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து: 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் நேற்றிரவு 10.45 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம் தீயணைப்பு வாகனங்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட வீர்ர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாகனங் கள் மூலம் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு லாரிகள் நிரப்பிய வண்ணம் இருந்தனர். தீ மளமளவென பரவியதால் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே தீயை அணைக்க முடிந்தது.

தீக்கான காரணம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் விரைந்து தீயணைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தற்போது தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மேற்கூரையில் இருந்து கற்கள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் இன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கிழக்கு கோபுரம் தவிர மற்ற அனைத்து கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலில் வழக்கம்போல் இன்று பூஜைகள் நடைபெறுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட கிழக்குகோபுர வாசல் பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பூக்கடை, வளையல் கடை, போட்டோ, சிலைகள் விற்கு கடைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளில் சுவாமி பொம்பைகள், ஆன்மீக படங்கள், பெண்களுக்கான அலங்கார பொருட்கள், கண்ணாடிகள் என, ஒவ்வொரு கடையிலும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக் காக வைத்து இருந்தனர்.

கட்டுப்பாடு:

கோவில் பாதுகாப்பு கருதி கோவிலுக்குள் கடைகள் செயல்படக்கூடாது என, பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தும், அது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. கோவிலுக்குள் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருப்பினும், இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

ஆலயபாதுகாப்புத்துறையினர் கூறுகையில், "கோவில் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. பணம் சம்பாதிக்கும் நோக்கில் கடைகளை கோவிலுக்குள் தொடர்ந்து அனுமதிக்கின் றனர். பாதுகாப்பு முறையாக பின்பற்றப்படு வதில்லை குறைவு. எங்களை போன்ற அமைப்புகள் ஏற்கனவே பாதுகாப்பு குறித்தும், கடைகளை வெளியேற்றவேண்டும் என, பலமுறை கோரிக்கை வைத்தாலும், கண்டுகொள்ளாதன் விளைவு தற்போது கோவிலுக்கு கோர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பகலில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருந்தால் அதிக உயிர் சேதம் சந்தித்து இருக்கவேண்டி சூழல் ஏற்பட்டு இருக்கும். இனிமேலாவது கோவில் நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும்" என்றனர்.

விபத்து குறித்து கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன் கூறும்போது, ''விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. கோயிலுக்குள் கடைகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். தீயால் உயிர் சேதம் இல்லை. 30-க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கிழக்கு கோபுரத்தில்..

கடந்த 2015ல் கிழக்கு கோபுரத்தில் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் பெய்த மழை காரணமாககிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது. தற்போதும் கிழக்கு கோபுரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x