

சென்னை: கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாக செங்கல் சூளைகள் இயங்கி வருகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மலையடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததால் மூட உத்தரவிடப்பட்ட 14 செங்கல் சூளைகள் தற்போது பேரூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, அங்கு செயல்படுகின்றன. மின் இணைப்பு இல்லாத சூளைகள் ஜெனரேட்டர் மூலம் இயங்குகின்றன. தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூளைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர் தாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.தொடர்ந்து, விசாரணை மார்ச் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.