Published : 03 Mar 2024 06:34 PM
Last Updated : 03 Mar 2024 06:34 PM

''நாம் தமிழர் கட்சியின் சின்னம் மீண்டும் ஒதுக்கப்படாததற்கு யார் காரணம்?'' - சீமானுக்கு அண்ணாமலை பதில்

அண்ணாமலை | கோப்புப்படம்

கோவை: "அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்து இல்லை என்பதால், நாம் தமிழர் கட்சி தாங்கள் ஏற்கனவே பெற்ற சின்னத்தை மீண்டும் பெற புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சின்னத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் சின்னம் கிடைக்காமல் போனதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்தது வழக்குத் தொடருவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாம் தமிழர் கட்சிக்கு அவர்களுடைய சின்னம் வேண்டுமெனில் முதலில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. சென்னையில் வெள்ளம் வந்துவிட்டது. அதனால்,விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்தால், கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும்.

நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை. 6 சதவீத வாக்கு, இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது ஒரு மக்களவை உறுப்பினரைப் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள்படிதான் சின்னம் ஒதுக்கப்படும். ஒருவேளை அதுபோல இல்லை என்றால் புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். நாம் தமிழர் அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி விண்ணப்பிக்கக் கூடாது? என்று நான் தடுக்கவில்லை. வேறொரு கட்சி விண்ணப்பித்து கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுள்ளனர். அண்ணாமலைக்கும், நாம் தமிழர் கட்சிக்கு இதற்கு முன்பு ஒதுக்கப்பட்ட சின்னம் ஒதுக்கப்படாததற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரிதான். இத்தனை ஆண்டு காலமாக தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி ஏன் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், சம்பந்தமே இல்லாமல் சீமான் என் மீது பழி சுமத்துகிறார். அக்கட்சித் தொண்டர்கள் நியாயமாக சீமான் மீது கோபப்பட வேண்டும். ஒரு கட்சியின் தலைவர், அவருடைய சின்னத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. எனவே, சீமான் உண்மையைத் தெரிந்து பேச வேண்டும். சீமான் முதலில் பிரதமர் மோடியை திட்டிக்கொண்டிருந்தார். இப்போது என்னைத் திட்ட ஆரம்பித்துள்ளார். விதிமுறைகளைப் பின்பற்றாமல், சின்னத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால், தேர்தல் ஆணையம் எப்படி சின்னம் ஒதுக்கும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு, பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்குத் தொடர்வேன், என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். | விரிவாக வாசிக்க > பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் - சீமான் காட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x