Published : 03 Mar 2024 04:22 AM
Last Updated : 03 Mar 2024 04:22 AM
திருவண்ணாமலை: ஆரணி நகரில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குப்பையை அகற்றும் பணியில் கவுன்சிலர் ஈடுபட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஏ.சி.மணியும், நகராட்சி ஆணையாளராக குமரனும் உள்ளனர். ஆரணி நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை தினசரி அகற்றுவது கிடையாது என்ற குற்றச்சாட்டு உள்ளது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவி வருவதாக ஆரணி நகர மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
‘உங்கள் ஊரில் உங்களைத்தேடி’ என்ற தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடங்கிய திட்டத்தின் கீழ், கடந்த வாரம் ஆரணியில் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முகாமிட்டிருந்தார். அப்போது அவர், தூய்மைப் பணிகளை நேரிடையாக மேற்கொண்டார். ஆரணி நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால், ஆரணி நகரம் தூய்மையாக காட்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நகரில் மீண்டும் குப்பைதேக்கம், கால்வாயில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குப்பையை அகற்றி, கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மக்களுக்குதான் இந்த பரிதாப நிலை என்றால், கவுன்சிலரின் கோரிக்கையையும் ஆரணி நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக, ஆரணி நகரம் 25-வது வார்டில் தூய்மைப் பணியில் நேரிடையாக களம் இறங்கி கடந்த 2 நாட்களாக பம்பரமாக சுழன்று வருகிறார் கவுன்சிலர் சுப்பிரமணியன்.
இவர், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பையை, நகராட்சியின் வாகனத்தை கொண்டு நேற்று அகற்றினார். மேலும், கழிவுநீர் கால்வாயில் இருந்த அடைப்புகளையும் அகற்றி சீரமைத்தார். அப்போது அவர் கூறும்போது, “எனது வார்டில் கடந்த சில நாட்களாக குப்பையை அகற்ற தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை. இதனால், குப்பை மலைபோல் குவிந்துவிட்டது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. குப்பையை அகற்றி, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யுமாறு என்னிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன். வீடு, வீடாக சென்று குப்பையை சேகரித்துள்ளேன். கழிவு நீர் கால்வாயில் இருந்த அடைப்புகளையும் சீரமைத்துள்ளேன். இந்த நிலை எனது வார்டில் மட்டுமில்லாமல், நகரம் முழுவதும் உள்ளது” என்றார். நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தூய்மைப் பணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சுப்பிரமணியன் ஈடுபட்டுள்ளது ஆரணி நகரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT