Last Updated : 29 Feb, 2024 09:15 PM

 

Published : 29 Feb 2024 09:15 PM
Last Updated : 29 Feb 2024 09:15 PM

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக தமிழக அரசு கருதக் கூடாது: உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக கருதக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா செல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கும்போது நூலக வரியும் சேர்த்து வசூலிக்கின்றன. நூலக வரியாக வசூலிக்கப்படும் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு வழங்க வேண்டும்.

மதுரை மாவட்ட மைய நூலகத்துக்கு மதுரை மாநகராட்சி ரூ.7 கோடி நூலக வரிபாக்கி வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 67 கிளை நூலகங்கள், 69 கிராமப்புற நூலகங்கள் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் 130 பணியாளர்கள், 50 தினக்கூலிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

நூலக வரியை செலுத்தாததால் நூலகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. புதிய புத்தகங்கள் வாங்க முடிவதில்லை. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடிவதில்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் நூலகங்களுக்கு மாதாந்திர மின்கட்டணம், பராமரிப்பு, தினசரி பத்திரிகை வாங்குவது, மரச்சாமான்கள் வாங்குவது என அனைத்து பணிகளும் தடைப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்த நூலக வரியை நூலகத்துறையிடம் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படவில்லை. எனவே, நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கவும், உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்த நூலக வரியை நூலகத் துறைக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, “நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக கருதக் கூடாது. அறிவை வளர்ப்பதற்கான முதலீடாக பார்க்க வேண்டும். நூலகங்களில் நிரம்பும் புத்தகங்கள் தான் வளமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும். நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை செய்வது அவசியம்.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கும் நூலகவரியை நூலகத்துறைக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தின் அனைத்து நூலகங்களும் போதுமான அடிப்படை வசதிகள் மேம்படும். 2020-2023 ஆண்டுக்கான புத்தகங்களை 6 மாதத்துக்குள் அரசு கொள்முதல் செய்து நூலகங்களுக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x