Published : 28 Feb 2024 07:41 PM
Last Updated : 28 Feb 2024 07:41 PM

அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் திட்டம் - அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

அரசுப் பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள்  மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இனி பேருந்து நடத்துநர்கள் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் வாயிலாக பயணிகளிடம் ரொக்கப் பணம், CARD மற்றும் UPI மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச் சீட்டு வழங்குவார்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (பிப்.28), போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், கிண்டி அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக கொடி அசைத்து, தொடங்கி வைத்தார்.

மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டுக்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் வாயிலாக பயணிகளிடம் ரொக்கப் பணம், CARD மற்றும் UPI மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

இவ்விழாவில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x