

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: 150+ விவசாயிகள் கைது: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நிலம் எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மீண்டும் வலுவாகியுள்ளது.
பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி: ஆந்திர முதல்வர் அறிவிப்பு: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: “பாஜக தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்” என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
"பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முதல் அடியெடுத்து வைத்துள்ளார். அடுத்த 100 நாட்கள் எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்கப் போகிறார்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதனிடையே, "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழக பாதுகாப்பு பணியில், 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மார்ச் 1-ம் தேதி 15 கம்பெனி படையினரும், மார்ச் 7-ம் தேதி 10 கம்பெனி படையினரும் தமிழகத்துக்கு வரவுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
சந்தேஷ்காலி விவகாரம்: உயர் நீதிமன்றம் கேள்வி: பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷேக் ஷாஜகான் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை; அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பே குற்றங்கள் பதிவாகியிருந்து, குற்றச்சாட்டுகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்காக அதிகாரிகளுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
‘அக்னி பாதை’யால் இளைஞர்களுக்கு அநீதி: கார்கே: அக்னி பாதை திட்டம் என்பது நாட்டின் ராணுவத்தில் நிரந்தர வேலைத் தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் முடிவால் சுமார் 2 லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதில் காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஹரியாணா அரசியல் பிரமுகர் படுகொலை - சிபிஐ விசாரணை: ஹரியாணா அரசியல் பிரமுகரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான நஃபே சிங் ரதீ, அம்மாநிலத்தின் ஜஜ்ஜர் மாவட்டம் பகதுர்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். தனது சொகுசு காரில் சென்றபோது அடையாளம் தெரியாதவர்கள் அவரது காரை நோக்கி பல முறை சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு, சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்தனர்.
கீழடி 2 கட்ட அகழாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட உத்தரவு: கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஞ்சி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி; தொடரை கைப்பற்றியது: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.