ஷேக் ஷாஜகானை கைது செய்யாதது ஏன்? - மேற்கு வங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஷேக் ஷாஜ்கான் | கோப்புப்படம்
ஷேக் ஷாஜ்கான் | கோப்புப்படம்
Updated on
1 min read

கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷேக் ஷாஜகான் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை; அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சந்தேஷ்காலி விவகாரம் குறித்து தாமாக முன்வந்து எடுத்தக்கொண்ட வழக்கு விசாரணையின்போது, நான்கு வருடங்களுக்கு முன்பே குற்றங்கள் பதிவாகியிருந்து, குற்றச்சாட்டுகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்காக அதிகாரிகளுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

“அந்தப் பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மாநில காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் 42 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது. கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்படி தடை விதிக்கப்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை. அதனால், ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செய்திதாள்களில் தகவல் வெளியிட வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சந்தேஷ்காலியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல்வாதிகள் செல்வது குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், "மக்கள் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் நிலஅபகரிப்பு தொடர்பாக பழங்குடியினர் குடும்பங்களிடமிருந்து 50 புகார்கள் வந்துள்ளன என்று தேசிய பழங்குடியினர் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 400 நில அபகரிப்பு புகார்கள் உட்பட பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் இருந்து 1,250 புகார்கள் வந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக ஜன.5-ம் தேதி ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளை அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து ஷாஜகான் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in