

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் செல்லும் 10 மின்சார ரயில்கள், இன்று முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, பயணிகளின் கூட்டம் பல மடங்குஅதிகரித்துள்ளது.
இதனால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள், வரும் வாரநாட்களில் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னைகடற்கரை - தாம்பரம் இடையே இரவு 7.19, 8.15, 8.45,8.55, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், இன்றுமுதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.
கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் வாரநாட்களில் நீட்டித்து இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நீட்டிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. அதேபோல, கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.