விஜயதரணி அடுக்கிய காரணங்கள் முதல் ஆம் ஆத்மி - காங். உடன்பாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ 24, 2024

விஜயதரணி அடுக்கிய காரணங்கள் முதல் ஆம் ஆத்மி - காங். உடன்பாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ 24, 2024
Updated on
3 min read

‘தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை’: “கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தேசிய, மாநிலக் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. இது குறித்து பரிசீலிக்கப்படும். அதேபோல் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், மது விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. தேர்தல் தொடர்பாக புகார்களை மக்கள் ஆணையத்திடம் தெரிவிக்கும் வண்ணம் சி-விஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு: நெம்மேலியில் 1,516 கோடியே 82 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பாஜகவில் இணைந்த விஜயதரணி அடுக்கிய காரணங்கள்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார். இதற்கான காரணங்களை அடுக்கிய அவர், “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. நான் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறேன். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஒரு ஜூனியருக்குதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான அதிருப்தி நீண்ட நாட்களாக இருந்தது. நீண்ட நாட்களாக நான் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் சேர்ந்து வந்த சேர்ந்து வந்தபோதும் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த முறையும் அந்த வாய்ப்பு கொடுக்கப்படாது என்றுதான் நினைக்கிறேன்.

அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரிய தலைவராக இருக்கிறார் பிரதமர் மோடி. அவரின் தலைமையின் கீழ் இந்த நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்னைப் போன்ற பெண்கள் இதனை உணர முடிகிறது. இஸ்லாமிய பெண்களுக்காக விடுதலையை கொடுத்து இருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்திருக்கிறார்கள். இது மாதிரியான விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்ய முயற்சி கூட செய்யவில்லை.

மோடி தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்ற விருப்பத்தோடு என்னை போன்றவர்கள் பாஜகவில் எங்களை இணைத்துக் கொண்டு வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கான தளம் மிக அதிகமாக இருக்கிறது” என்று விஜயதரணி கூறினார்.

இதனிடையே “விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

விஜதரணி எம்எல்ஏ பதவி - தகுதி நீக்கம் கோரும் காங்கிரஸ்: பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த விஜயதரணி தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஓர் அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் எஸ்.விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பாஜகவுடன் திமுகவுக்கே ரகசிய உடன்பாடு” - இபிஎஸ்: "வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம். பாஜகவுடன் திமுகவுக்கு தான் ரகசிய உடன்பாடு இருக்கிறது. அதிமுகவுக்கு இல்லை. அண்மையில் கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்வு நடந்தது. அதற்கு பிரதமரை வரவழைத்தார்கள். அன்று ‘கோ பேக்’ மோடி என்றார்கள் இன்று ‘வெல்கம் மோடி’ எனக் கூறுகிறார்கள். இதுதான் ரகசிய உடன்பாடு" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆம் ஆத்மி - காங். தொகுதிப் பங்கீடு நிறைவு: ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் சந்திக்க முடிவெடுத்துள்ள நிலையில், மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு நான்கு, காங்கிரஸுக்கு மூன்று என பிரித்துக் கொள்ள இரண்டு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. மேலும் குஜராத், ஹரியாணா, கோவா மற்றும் சண்டிகரிலும் இரு கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளன.

குஜராத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி பரூச், பாவ்நகர் என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஹரியாணாவில் குருஷேத்ரா தொகுதியை ஆம் ஆத்மி எடுத்துக் கொண்டுள்ளது. கோவா மற்றும் சண்டிகரில் உள்ள தலா ஒரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு வழங்கியுள்ளது.

இதனிடையே தொகுதிப் பங்கீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அமைச்சர் அதிஷி, "இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எல்லா இடங்களில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன" என்று தெரிவித்துள்ளர்.

டெல்லி சலோ போராட்டம் பிப்.29 வரை நிறுத்திவைப்பு: எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறும் போராட்டத்தை வரும் 29-ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டம் ரத்து: அசாம் அரசு: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பின்னிரவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்: இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராஞ்சி டெஸ்ட் நாள் 2: சறுக்கிய இந்திய அணி: ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான சனிக்கிழமை இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மட்டுமே அபாரமாக விளையாடினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in