

சென்னை: பாஜகவின் இணைந்த விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தது தமிழக காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஓர் அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் எஸ்.விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.