

பூந்தமல்லி: சென்னை மாநகர மேயர் பிரியா பயணித்த கார் பூந்தமல்லியை அடுத்துள்ள சென்னீர்குப்பம் பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேயர் பிரியாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் வெள்ளிக்கிழமை இரவு பூந்தமல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது மேயர் பிரியா வந்த காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த மேயரின் கார் கட்டுப்பாட்டை இழந்து அந்தக் காரின் மீது மோதியது. இதில் மேயர் பிரியா பயணித்த காரின் முன்பக்கம் நொறுங்கியது.
அதேநேரம், மேயர் பிரியாவின் காரின் மீது பின்னால் வந்த லாரி ஒன்று மோதியது. இந்த இரண்டு வாகனங்களுக்கு மத்தியில் மேயர் பிரியாவின் கார் சிக்கியதால், வாகனத்தின் இரண்டு புறங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில், மேயர் பிரியாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேயர் பிரியா வந்த வாகனம் விபத்தில் சிக்கியதை அறிந்த காவல் துறையினர் காரிலிருந்து அவரை மீட்டனர். பின்னர் மாற்று வாகனத்தில், மேயர் பிரியாவை காவல் துறையினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீஸார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் பகுதியில் சாலைகள் சேதமடைந்து இருப்பதால், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் சற்று வேகமாக குறைவாக வாகனங்களை இயக்கிச் செல்வதால், இந்த விபத்து நேரிட்டதாக போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.