

திருவண்ணாமலை: திருவண்ணாமலை - கீழ்பென்னாத்தூர் அருகே சகோதிரியின் திருமணத்துக்கு சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த கப்ளாம்பாடி கிராமத்தில் வசித்தவர் பாண்டியன் (27). இவர், திருவண்ணாமலையில் உள்ள மருந்துக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது சகோதரி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கடலாடி குளம் கிராமத்தில் நடைபெற்ற சகோதிரியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று ( பிப்.22 ) அதிகாலை காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இவருடன், அவரது நண்பர்களான பிற மருந்துக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் கிராமத்தில் வசித்த அழகன் (38), வேலூர் கஸ்பா பகுதியில் வசித்த பிரகாஷ் (34), திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சிரஞ்சீவி (40) ஆகியோரும் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது. காரின் முன் பகுதி மற்றும் ஓட்டுநர் இருக்கை வரை முழுமையாக நொறுங்கி உருகுலைந்தது. டிராக்டர் பெட்டியின் பின் பகுதியும் சேதமடைந்து, அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்று ஓடியன.
இந்த விபத்தில் பாண்டியன், அழகன், பிரகாஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் மற்றும் கிராம மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிரஞ்சீவியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
வள்ளிவாகை கிராமத்தில் வசிக்கும் டிராக்டர் ஓட்டுநர் பூங்காவனம் படுகாயமடைந்து, உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் சிக்கிய கார் மற்றும் டிராக்டரை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.