

ஓசூர்: கனரக வாகனங்களின் உரிமம் தொடர்பான தணிக்கைக்காகத் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்குத் தமிழக நுழைவு வாயில் பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி உள்ளது. இவ்வழியாகத் தினசரி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், விடுமுறை நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இவ்வழியாகச் சென்று வருகின்றன. வெளி மாநிலத்திலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் ஜுஜுவாடியில் உள்ள வட்டார போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு, வாகன உரிமம், சாலை வரி செலுத்திய விவரம் உள்ளிட்ட தகவல்களைத் தணிக்கை செய்வதோடு, உரிமம் இல்லாத வாகனங்களுக்குத் தற்காலிக உரிமம் வழங்கி வருகின்றனர்.
இத்தணிக்கைக்காக வாகனங் களை ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்துவதால், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி முதல் தமிழக எல்லையான ஜுஜுவாடி வரையில் வாகன நெரிசல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்வேறு பணிக்ச்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது: வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத் துக்கு உரிமம் இல்லாமல் வரும் வாகனங்கள் தற்காலிக உரிமத்தை தற்போது, ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் உரிமம் இல்லாமல் வருகின்றனர். இத்தணிக்கைக் காக ஜுஜுவாடி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், எல்லையில் தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இதைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று ஏமாற்றி வருகின்றனர். இப்பிரச்சினையை தடுக்க வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ள சர்வீஸ் சாலை வழியாக சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தையும் அனுமதித்து, தணிக்கைக்குப் பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.
இதற்காக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து தொடங்கும் ஜுஜுவாடி சர்வீஸ் சாலை வழியாக சரக்கு மற்றும் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்புகளை தமிழக நுழைவு வாயில் பகுதியில் பன்மொழியில் அறிவிப்பு பலகை மூலம் ஓட்டுநர்கள் அறியும் வகையில் வைக்க வேண்டும்.இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் குறைவதோடு, தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது தடுக்கப்படும். எனவே, கனரக வாகனத் தணிக்கையை முறைப்படுத்தி, நெரிசலைச் சீர் செய்ய உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.