Last Updated : 20 Feb, 2024 09:39 PM

 

Published : 20 Feb 2024 09:39 PM
Last Updated : 20 Feb 2024 09:39 PM

மக்களவைத் தேர்தல்: தமிழக - கர்நாடக எல்லைகளில் பாதுகாப்பு குறித்து மேட்டூரில் ஆலோசனை

மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேட்டூர்: வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து மேட்டூர் சார் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக - கர்நாடக காவல் துறையினர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தேர்தலை எதிர்கொள்வது குறித்து அரசியல் கட்சியினர் தற்பொழுது தெருமுனைப் பிரச்சாரம், ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் நிலையில், அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையம், வாக்குச்சாவடி அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்துக்கு உட்டபட்ட மேட்டூர் தொகுதியானது, தருமபுரி மக்களவைத் தொகுதியில் இணைந்துள்ளது. இந்நிலையில், விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், மாநில எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சேலம் எஸ்பி அருண் கபிலன் தலைமையில் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜோஸ் பாதம், ஈரோடு ஏடிஎஸ்பி பாலமுருகன், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை காவல் ஆய்வாளர் ஜெகதீஷ், கொள்ளேகால் கலால் ஆய்வாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து எஸ்பி அருண் கபிலன் கூறியது: "மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடி சேலம் வருவாய் கோட்டத்துக்கும், ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அடுத்த பகுதியில் தமிழக - கர்நாடகா எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசு காவல்துறை, வனத்துறை, கலால் உள்ளிட்ட மூன்று துறைகளும் சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளது.

இதன் காரணமாக தமிழக - கர்நாடகா எல்லையான பாலாறு மற்றும் காரைக்காடு சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல கலால் பிரிவு அதிகாரிகள், உளவு பிரிவு அதிகாரிகளையும் பாதுகாப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு மாநில எல்லையிலும் சட்ட விரோத கும்பல் உள்ளே நுழைவதை தடுத்து கண்காணிக்கவும், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவில் மதுபான கடத்தலை தடுக்கவும், எல்லையோர பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கி பயன்பாடு அதிக அளவில் இருப்பதால் அதனை கண்காணிக்கவும், தேர்தல் நேரங்களில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x