

தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 39 மக்களவை தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. ஒவ்வொரு பொறுப்பாளர்களும், பூத் கமிட்டி வலுப்படுத்துதல், மக்கள் சந்திப்பு, வாக்கு சேகரிப்பு என பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக மக்களவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, என் மண் என் மக்கள் யாத்திரையின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், நடைபயணம் முடியும் தருவாயில், அமர்பிரசாத் ரெட்டிக்கு தற்போது, தமிழக பாஜக மக்களவை தேர்தல் பணிகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவரது தலைமையின் கீழ், ஊடக பிரிவு, விருந்தினர் ஒருங்கிணைப்பு பிரிவு, தலைவர்கள் பிரச்சார பிரிவு, எஸ்சி, எஸ்டிபிரிவு, மத்திய அரசின் திட்ட பிரிவு, மகளிர் பிரிவு என 30 பிரிவுகள் செயல்பட இருக்கின்றன. மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல, வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்ந்து இதே குழுக்கள் பணி செய்ய இருப்பதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், வரும் 17, 18-ம் தேதிகளில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.