

சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். அதில், “விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அது சார்ந்தா அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
பயிர்க் காப்பீடு: இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்: ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2023 2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024 2025 ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.