

‘சிவகங்கை: ‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது’’ என ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்தன.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ.முத்துப் பாண்டியன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு இல்லாதது, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜாக்டோ-ஜியோ விடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது அதிர்ச்சி அளிக்கிறது. பிப்.22-க்குள் சாதகமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு விரிவாக்கம், மூன்றாம் பாலின மாணவர்களின் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றது, புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியது, தமிழ் நூல்களை 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கியது, தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது போன்றவற்றை வரவேற்கிறோம். என்று கூறினார்.
காரைக்குடி தொழில் வணிகக் கழக செயலாளர் கண்ணப்பன் கூறுகையில் ‘‘ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
காரைக்குடிக்கு 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் திட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் காரைக்குடிக்கு திரைப்பட நகரம், தொழிற்பூங்கா அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று கூறினார்.