Published : 19 Feb 2024 09:17 PM
Last Updated : 19 Feb 2024 09:17 PM

பட்ஜெட் 2024-25 ஹைலைட்ஸ்: குடிசையில்லா தமிழகம் முதல் ரூ.1,000 ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரை

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் சிறப்பு அம்சங்கள்:

  • மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி.
  • தரணியெங்கும் தமிழ், மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் இடம்பெற ஏற்பாடு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
  • கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு.
  • கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு.
  • பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி ஒதுக்கீடு.
  • 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

2030-க்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் எனும் பெயரில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம். 2024-25ல் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் மதிப்பீடு 3.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > குடிசையில்லா தமிழகத்துக்காக 8 லட்சம் வீடுகள்: கனவு இல்லம் திட்டம் @ பட்ஜெட் 2024

  • புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள், ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்ட வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. சென்னை தீவுத்திடல் மேம்படுத்தப்படும்.
  • அடையாறு உள்ளிட்ட சென்னை நதிகள் சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு. விரிவாக வாசிக்க > தனியார் பங்களிப்புடன் சென்னை நதிகள் சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு
  • தமிழகத்தின் முதன்மை நதிகளான காவிரி, நொய்யல், வைகை, தாமிரபரணி புனரமைப்புக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
  • நாமக்கல் - ரூ.358 கோடி; திண்டுக்கல் - ரூ.565 கோடி; பெரம்பலூர் - ரூ.366 கோடி ஒதுக்கீட்டில் புதிய குடிநீர்த் திட்டங்கள் உருவாக்கப்படும்.
  • 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
  • அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். | விரிவாக வாசிக்க > ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்
  • ரூ.213 கோடியில் பொது நூலகங்களின் புதிய கட்டடங்கள் உருவாக்கம் மற்றும் பழைய கட்டடங்கள் சீரமைக்கப்படும்.

5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கப்படும். விரிவாக வாசிக்க > விளிம்புநிலை மக்களுக்காக ‘தாயுமானவர்’ திட்டம் @ தமிழக பட்ஜெட் 2024

  • அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு.
  • 7.5% உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.
  • பழங்குடியின இளைஞர்கள் 1,000 பேருக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்.
  • மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.
  • 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்துக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.
  • திண்டுக்கல், சிவகங்கை மற்றும் திருவாரூரில் சிட்கோ தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • தொல்குடிபழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு
  • திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில், 6.3 லட்சம் சதுர அடி பரப்பளவிலும், மதுரையில் ரூ.345 கோடி மதிப்பீட்டில், 6.45 லட்சம் சதுர அடி பரப்பளவிலும் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.
  • யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறன் ஆய்வகங்கள் அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

‘தமிழ்ப் புதல்வன்’ எனும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்: அரசுப் பள்ளியில் பயின்ற உயர் கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 - ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் @ பட்ஜெட் 2024

  • 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்.
  • ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
  • ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் கட்டப்படும்.
  • கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் புதிய தகவல் தொழிநுட்பப் பூங்கா அமைக்கப்படும்
  • இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை, கோவை மற்றும் மதுரையில் 1,000 நபர்களுக்கு மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC),ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் 6 மாத உறைவிடப் பயிற்சிக்கு ரூ. 6 கோடி ஒதுக்கீடு.
  • தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும்.
  • ரூ.2,483 கோடியில் விருதுநகர் மற்றும் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்.
  • சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலத்தில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையில் குறு தொழில் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

தஞ்சாவூர், சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். | விரிவாக வாசிக்க > சிப்காட் முதல் நியோ டைடல் பார்க் வரை: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்

  • தமிழகத்தில் முதன்முறையாக புத்தொழில் சர்வதேச மாநாடு நடத்தப்படும்.
  • ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தூத்துக்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்ற 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
  • புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள்
  • துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு.
  • பசுமை ஆற்றல் நிறுவனம் தோற்றுவிக்கப்படும்.
  • தமிழக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் தொடங்கப்படும்.
  • கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன்மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
  • பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். குறளகம் நவீனப்படுத்தப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.

நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் பெற்ற தமிழக கடற்கரைகளான சென்னை - மெரினா, கடலூர் - சில்வர் பீச், விழுப்புரம் - மரக்காணம், நாகப்பட்டினம் - காமேஸ்வரம், புதுக்கோட்டை - கட்டுமாவடி, ராமநாதபுரம் - அரியமான், தூத்துக்குடி - காயல்பட்டினம் மற்றும் திருநெல்வேலி - கோடாவிளை ஆகியவை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு.

  • சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
  • ரூ.1,675 கோடி மதிப்பீட்டில் அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள் மற்றும் எண்ணூர் கழிமுகம் பாதுகாக்கப்படும்.
  • 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
  • 27,000 தேயிலை சிறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.
  • ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
  • கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுர அடி பரப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
  • கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் மினி ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
  • பழங்குடியினர் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு. | வாசிக்க > தமிழில் மேலும் 600 நூல்கள், 8 இடங்களில் அகழாய்வுகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்
  • திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • சென்னையில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு வணிக வளாகம் அமைக்கப்படும்.

ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீடகப்பட்டுள்ளன. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். | வாசிக்க > 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு

  • ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் நவீனப்படுத்தப்படும்.
  • வேளாண்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கல்விக்கடன் ரூ.8 லட்சம் கோடி முன்னுரிமைக் கடன்கள்.
  • மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும்.
  • தமிழகத்தில் 12 இடங்களில் புதிய நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்.
  • ரூ.20 கோடியில் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகளும், மீன் இறங்குதளங்களும் அமைக்கப்படும்
  • தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்டமுன்வடிவு நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
  • பட்டியல் சமூக இளைஞர்கள் 3.5% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் பெற வகை செய்யும் தொழில்முனைவோர் கடன் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.
  • சிந்துவெளிப் பண்பாடு நூற்றாண்டுக் (1924-2024) கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.
  • கோவை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரியில் ஆயத்த தொழில் வளாகங்கள் அமைக்கப்படும்.

மலைப் பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > மலைப் பகுதிகளிலும் இனி மகளிர் கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x