

ராமேசுவரம்: மதுரை சிறையிலிருந்து விடுதலை யானவரின் தையலகத்தை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார்.
மதுரை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளுக்கு தையல் பயிற்சி, உணவு பொருட்கள், கட்டிடப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. இங்கு தையல் பயிற்சி பெற்றவர் பரமக்குடி அருகே உள்ள கே. கருங்குளத்தைச் சேர்ந்த சாமிவேல் ( 48 ). இவர், வழக்கு ஒன்றில் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தபடி தொலை நிலைக் கல்வி மூலம் பி.ஏ. பட்டம் பெற்றதுடன், தொழிற் கல்வியாக தையல் வேலையையும் கற்றார்.
நன்னடத்தை காரணமாக சாமிவேல் சிறையிலிருந்து அண்மையில் விடுதலையானார். இந்நிலையில், பரமக்குடி விலக்கு ரோடு அருகே தையல் கடையை அவர் தொடங்கியுள்ளார். இந்தக் கடையை சிறைத் துறை டிஐஜி பழனி நேற்று தொடங்கிவைத்து வாழ்த்தினார். மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறை வாசிகளின் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. பயிற்சி பெற்றவர்களுக்கு சிறையில் பணி வழங்கப்படுவதுடன், அவர்கள் விடுதலையான பிறகு தொழில் தொடங்க தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என்று கூறினர்.