செல்லகுமாருக்கு சீட் செல்லுபடியாகுமா? - கிருஷ்ணகிரி காங்கிரஸில் ஒலிக்கும் கலகக் குரல்

செல்லகுமார்
செல்லகுமார்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக செல்லகுமார் இருந்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் கிருஷ்ணகிரியும் உள்ளது. இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். இதில் பேசிய நிர்வாகிகள் பலர் “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் திமுக – அதிமுக கட்சிகளை விட வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது சிதறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பூத் கமிட்டிக்குக் கூட ஆட்கள் இல்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த செல்ல குமாரை எம்.பி. ஆக்கியதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, வரும் தேர்தலில் கிருஷ்ணகிரியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினாலும், செல்லகுமாருக்கு, ‘சீட்’ வழங்கக் கூடாது. இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். செல்ல குமார் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். எனவே, அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப் படாத நிலையில், கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள புகைச்சல் கிருஷ்ணகிரி மாவட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in