

கோவை: இண்டியா கூட்டணியை பார்த்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டதாக, கோவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங் தெரிவித்தார்.
கோவையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டாக பாஜக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தலைநகரை நோக்கி அமைதிப் பேரணி சென்ற விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டு மூலம் விரட்டியடித்தனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறி தேர்தல் பத்திரத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.6,566 கோடி தேர்தல் பத்திரமாக பாஜக பெற்றுள்ளது. தங்களை வளர்த்துக் கொள்ளவே இந்த தேர்தல் பத்திர முறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உடனடியாக அறிவிக்கப்படும். பாஜகவுக்கு இண்டியா கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது.
எனவே தான் இந்த கூட்டணியை உடைக்க பாஜக மறைமுகமாக முயற்சி செய்து வருகிறது. இண்டியா கூட்டணி தொடர்பாக பொய்யான தகவலை பாஜக பரப்பி வருகிறது. இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டக் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், என்றார். அப்போது, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.