

மதுரை: “தமிழகத்தை பொறுத்த அளவில் ‘இண்டியா’ கூட்டணி வலுவாக உள்ளது. மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என அடித்துச்சொல்கிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே கிடையாது” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியது: “தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இனிமேல் வாங்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனரே தவிர வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லவில்லை. இதில் 90 சதவீத பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. மற்ற எந்தக் கட்சிக்கும் இந்த அளவுக்கு நிதி வரவில்லை. ஆனால், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் காங்கிரஸ் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது பழிவாங்கும் செயல். தேர்தலுக்கு முன்பு வாடிக்கையாக அரசியல் கட்சியை முடக்குவதற்காக எடுக்கப்படும் நிகழ்வு. அரசியல் கட்சியில் ‘சீட்’ கேட்பது அவரவர் உரிமை. சுதர்சன நாச்சியப்பன் கடந்த முறையும், இந்த முறையும் கேட்டுள்ளார். ஆனால் யாருக்கு சீட் என முடிவெடுக்க வேண்டியது மத்திய தேர்தல் கமிட்டி.
தொகுதி யாருக்கு என்பதை கூட்டணி கட்சித் தலைமை முடிவெடுக்கும். அதன்பின் வேட்பாளர் முடிவாகும். திமுக தான் கூட்டணிக்கு தலைமை. அவர்கள்தான் தொகுதியை பங்கிட்டு கொடுப்பர். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதால் அதைப் பொறுத்தே தொகுதி பகிர்ந்தளிக்கப்படும். இறுதியில் 39 தொகுதிகளுக்குள்தான் கொடுக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் இலக்கணம் பொறுத்தே அரசியல் இலக்கணம் நடைபெறும்.
தமிழகத்தை பொறுத்த அளவில் ‘இண்டியா’ கூட்டணி வலுவாக உள்ளது. மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என அடித்துச்சொல்கிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே கிடையாது. மத்திய பாஜக அரசுக்கு எதிராகத்தான் அனைத்து தரப்பினரும் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் மீதான கோபம் போல் மற்ற மாநிலங்களிலும் கோபத்தை வெளியில் கொண்டு வந்தால் கூட்டணிக்கு நல்லது” என்று அவர் கூறினார்.