

மதுரை: தேர்தல் அதிகாரியைத் தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட17 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மதுரை மேலூர் அருகேஉள்ள வெள்ளலூர் அம்பலகாரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள், மு.க.அழகிரி தலைமையிலான திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மேலூர் தேர்தல் அலுவலரும், வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் ஊழியர்கள் கோயிலுக்குள் வீடியோ கேமராவுடன் சென்று, படம் பிடித்தனர். அப்போது, திமுகவினர் தன்னைத் தாக்கி, கேமராவை சேதப்படுத்தியதாக வட்டாட்சியர் காளிமுத்து, கீழவளவு போலீஸில் புகார் அளித்தார்.
மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2019 வரை மேலூர் நீதிமன்றத்திலும், பின்னர் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிலர் பிறழ்சாட்சியம் அளித்தனர். விசாரணை நிலுவையில் இருந்தபோது குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் முத்துலெட்சுமி நேற்று தீர்ப்பு வழங்கினார். மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி, திருஞானம், செந்தில், பொன்னம்பலம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் ஆகியோர் ஆஜராகினர். “வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, 17 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.