தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த புதிய விதிமுறைகள் என்னென்ன?

தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த புதிய விதிமுறைகள் என்னென்ன?
Updated on
2 min read

மதுரை: தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயத்தை 3 மணி நேரத்தில் முடிக்கவும், அதிகபட்சம் 5 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த ரவி, பேராவூரணி தாலுகா செருபாலக்காடு கிராமத்தில் பிப். 18-ல் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாட்டுவண்டி பந்தயம், ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்துவதற்கு பொதுவான விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஸ்ராவத் பதில் மனு தாக்கல் செய்தார்.அதில், மாட்டு வண்டி பந்தயம், ரேக்ளா ரேஸ் நடத்த விலங்குகள் நல வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். பங்கேற்பாளர்கள் சுகாதாரத் துறையிடம் உடற்தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

காளை மாட்டு வண்டிப் பந்தயம் பகல் நேரத்தில் மட்டும் நடத்தப்பட வேண்டும். முழுப் போட்டியும் அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். மாட்டு வண்டி பந்தயத்தில் சூதாட்டம் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் இருக்கக்கூடாது. காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கக் கூடாது. இதேபோல் மாட்டு வண்டியில் செல்பவர்கள் மது அருந்தக்கூடாது. ஒவ்வொரு காளை வண்டிக்கும் உரிய அதிகாரிகளிடம் உறுதிச்சான்றிதழ் பெற வேண்டும்.

பந்தயம் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் நடத்தப்படக்கூடாது. கிராமச் சாலைகள் அல்லது காலி மைதானத்தில் நடத்தப்பட வேண்டும். மாட்டு வண்டிப் பந்தயம் முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். காளைகள் எந்த வகையிலும் சித்திரவதை செய்வதை அனுமதிக்கக்கூடாது. காளைகளை சவுக்கால் அடிக்க அனுமதிக்கக்கூடாது. சவுக்கை வண்டிக்காரர் காற்றில் சுழற்றி தரையில் மட்டுமே அடிக்க வேண்டும். மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதில் சாதி, வகுப்பு மற்றும் அரசியல்சாயம் இருக்கக் கூடாது.

பந்தய வண்டியில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும், அதிபட்சம் 5 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பந்தயம் நடத்த அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 மாட்டு வண்டிகளுக்கு மேல் செல்லக் கூடாது. அரசியல் கட்சிக் கொடிகள், மதக் கொடிகள், கோஷங்கள் மற்றும் பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

மாட்டு வண்டிப் பந்தயத்தில் பங்கேற்கும் அனைத்து காளைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காளைகள் நல்ல நிலையில் இருக்கின்றன, போதை ஏற்படுத்தும் பொருட்கள் கொடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை பின்பற்றி மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்து கொண்டு, தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது குறித்த விதிமுறைகள் குறித்து அனைத்து டிஎஸ்பிக்கள், மாநகர் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சுற்றறிக்கை அடிப்படையில் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in