

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் பல கிராமங்களில் பொங்கல் பண்டிகை களைகட்டவில்லை. வழக்கமாக நடத்தப்படும் மாட்டுவண்டி, விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பயிர்கள் அடியோடு சேதமடைந்தன. ஆடு,மாடு, கோழி என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன.
50-க்கும் மேற்பட்ட காளைகள்: இதனால் பல கிராமங்களில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் உற்சாகமின்றிக் காணப்படுகிறது. தூத்துக்குடி அருகேயுள்ள சொக்காரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்படும். இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் காளைகளை வளர்த்து வருகின்றனர்.
பொங்கலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். ஆனால் பெருமழையால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாட்டுவண்டிப் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செக்காரக்குடி எஸ்.காமராஜ் கூறும்போது, “செக்காரக்குடி ரேக்ளா ரேஸ் பிரசித்தி பெற்றது. திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். ஆனால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் போன்ற மானாவாரிப் பயிர்கள் மழையால் சேதமடைந்துவிட்டன. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.
விவசாயிகள் கவலை: இதேபோல, பல கிராமங்களில் பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்துவிட்டதால், அறுவடைத் திருநாளை எப்படிக் கொண்டாடுவது என்று விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
அதுபோல, தாமிரபரணி கரையோரம் உள்ள பல கிராமங்களில் பயிர்களுடன் வீடுகளும், உடமைகளும் சேதமடைந்துள்ளதால், மக்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.