கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்.
Updated on
1 min read

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் சட்டப்பேரவையில் பதிலளித்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. ஆனால் அவற்றை தவிர்ப்பதற்காக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நேற்று சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர், இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளிக்கப்பட்டது. பெரிய பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. ஆனால் சிறிய பிரச்சினைகள் இருந்தால் அதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யார் கூறினாலும், சரி செய்வோம். தொடர்ந்து வாரம் ஒருமுறை நான் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அந்த செய்தி பெரிய செய்தியாக, மாற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திலிருந்து வரவேண்டிய பேருந்துகள் வந்து கொண்டிருந்த சூழலில், அந்தப் பேருந்துகள் குறித்த நேரத்தில் வந்து சேர முடியாத சூழல் ஏற்பட்டது. எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமோ, அதுபோல முகூர்த்த நாள் மற்றும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை ஆகியவற்றை கருத்தில், கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை (இன்று) காலையில் இருந்து கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

1,215 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு இயக்கப்பட உள்ளன. மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 6 ஏடிஎம்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனியார் யூடியூப் சேனல் ஒன்று தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in