சிவகங்கை அருகே 1,600 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 12 கிராம விவசாயிகள் எதிர்ப்பு

10,000 பேரை திரட்டி போராட்டம் நடத்த முடிவு
சிவகங்கையில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர்

சிவகங்கையில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர்

Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை அருகே 1,600 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு 12 கிராம விவசாயிகள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், 10,000 பேரை திரட்டி பேராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் வேம்பங்குடி பகுதியிலும், காளையார்கோவில் அருகே பால்குளம் பகுதியிலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பால்குளம் பகுதியில் 100 ஏக்கர் அரசு நிலம் உட்பட மொத்தம் 550 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

அதேபோல், வேம்பங்குடி சிப்காட் தொழிற்பேட்டைக்காக வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு, கீழக்கண்டனி, ஆலங்குளம், உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்காப்பள்ளம், உச்சப்புளி, வெள்ளஞ்சி, காட்டுநெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் அரசு நிலம் உட்பட மொத்தம் 1,600 ஏக்கரும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே பால்குளம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பால்குளம், புதுக்குடியிருப்பு, பாப்பான் கண்மாய், மந்திக் கண்மாய் உள்ளிட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில், இன்று வேம்பங்குடி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

இதில், சிவகங்கை நகராட்சித் தலைவர் துரை ஆனந்த், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலாளர் செல்லமணி, மார்க்சிஸ்ட் கம்யூ. விஸ்வநாதன், இந்திய கம்யூ. மருது, தமிழக வாழ்வுரிமை கட்சி நடிகர் குட்டிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு, நகராட்சித் தலைவர் சி.எம். துரை ஆனந்த் கூறும்போது, “12 கிராமங்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மொத்தம் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதிகளின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தினால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும். இது தொடர்பாக, முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரின் முறையிடுவது, அங்கு நடவடிக்கை இல்லாவிட்டால் 10,000 பேரை திரட்டி போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்” என்று நகராட்சித் தலைவர் கூறினார்.

<div class="paragraphs"><p>சிவகங்கையில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர்</p></div>
நேபாள வெள்ளம்: உத்தரப் பிரதேச நதிக் கரையில் ஒதுங்கிய 7 சடலங்கள் மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in