

சென்னை: கடந்த நிதியாண்டில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம், முறையற்ற பயணம் உள்ளிட்ட பிரிவுகளில் 12.24 லட்சம் வழக்குகள் பதிந்து, ரூ.65.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26), ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டிக்கெட் இல்லாமல் பயணம், முறையற்ற பயணம் மேற்கொண்டது தொடர்பாக,12.24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.65.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
பயணிகள் ரயில் நிலைய வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னரே முறையான டிக்கெட்களைப் பெற்று, அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் டிக்கெட்களை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.