

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினம், பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.