ஹரியாணாவில் பதற்றம் முதல் கவனம் ஈர்த்த ஸ்ரீபதி வரை! - செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.13, 2024

ஹரியாணாவில் பதற்றம் முதல் கவனம் ஈர்த்த ஸ்ரீபதி வரை! - செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.13, 2024
Updated on
3 min read

ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு, தடியடி: ஹரியாணா எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள் மீது தடியடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். அவர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்தனர். ஹரியாணாவின் கானவுரி என்ற இடத்தில் போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அரசு எச்சரிக்கை: சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிடப்பட வேண்டும். பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி, இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே, இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.

இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “சிறு சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் பரிந்துரைபடி இந்தக் கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக, தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து இரண்டு மணித் துளிகள் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு - உயர் நீதிமன்றம் கேள்வி: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும், “இன்னும் காலம் கடந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநரின் அனுமதி பெறலாம். விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடவில்லை. வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை.

ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம். அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

“நிதி நிலைமை சரியில்லை...” - அமைச்சர் தங்கம் தென்னரசு: நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும். எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசின் ‘சிஸ்டம்’ மீது ராகுல் சாடல்: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சத்தீஸ்கர் மாநிலம் சூர்குஜா மாவட்டத்தில் பயணித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த நாட்டில் நிலவும் ‘சிஸ்டம்’ ஆட்சி முறையால் ஒரு சிலர் வெகுவாக ஆதாயம் அடைகிறார்கள். ஆனால், சாமானிய மக்கள் ஜிஎஸ்டி வரி தொடங்கி எல்லா வரிகைளையும் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் பசியில் வாடி உயிரிழக்கின்றனர்” என்று சாடினார்.

மின் கட்டண உயர்வு அபாயம்: மார்க்சிஸ்ட் கவலை: மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், மின் கட்டணம் உயர்வது என்ற நிலை உருவாகி பொது மக்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

ஆம் ஆத்மியின் டெல்லி தொகுதிப் பங்கீடு திட்டம்: டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை வழங்க ஆம் ஆத்மி கட்சி முன்வந்துள்ளது. எஞ்சிய ஆறு இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செய்துள்ளது. இது, இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் சில தினங்களில் இறுதி வடிவம் பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதி!: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். சமூக நீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்தார் அசோக் சவான்!: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in