Published : 13 Feb 2024 10:46 AM
Last Updated : 13 Feb 2024 10:46 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து இரண்டு மணித் துளிகள் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பத்ம பூஷண் விருது: நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்நிகழ்வில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்த விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேவையில் இன்று.. சட்டப்பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளார்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்.13-ம்தேதி பேரவையில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 14-ம் தேதியும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். 15-ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிப்பார். அத்துடன், பேரவை கூட்டத்தொடர் முடிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (பிப்.23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT