புதிதாக 4 ஆயிரம் பேருந்துகள் வாங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

புதிதாக 4 ஆயிரம் பேருந்துகள் வாங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத்தான் இயக்கி கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டினார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெண்டர் விடப்பட்டுள்ளது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுகவின் ஆட்சியில்புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டிஉள்ளார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.20-ம் தேதிதான் 100 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 99 புதிய பேருந்துகள் என புதிதாக 199 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதையடுத்து 4,000 பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, நடைமுறை முடிந்து விரைவில் அந்தப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. கரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் கரோனா காலம் முடிந்த பிறகு புதிய பேருந்துகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி தமிழக அரசின்நிதியில் 2 ஆயிரம் பேருந்துகளையும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இருந்து 2 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 100 மின்சார பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.

எனவே குற்றம்சாட்டுவதற்கு முன்பாக அவருடைய காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் யோசித்து பார்க்க வேண்டும். அதேபோல ஆசியாவிலே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பழனிசாமி, வர தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும் அவரை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதைக் காட்ட தயாராக இருக்கிறோம்.

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் உள்ள அவர்களது பணிமனைகளில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கிக் கொள்ளலாம் என்றுதான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்கலாம் என்று ஒரு தவறான கருத்து சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in