சிறைவாசிகள் முன்விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காதபோது நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

சிறைவாசிகள் முன்விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காதபோது நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில் உயர் நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள எஸ்.ஏ.பாஷா, சாகுல் ஹமீது, ஜாகீர்உசேன், விஜயன், பூரிகமல் உள்ளிட்ட 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி அவர்களது குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந் தனர்.

இந்த வழக்குகள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாநிலஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த 49 கைதிகளையும் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக முதல்வரின் பரிந்துரை, ஆளுநர் முன்பாக நிலுவையில் உள்ளது என தெரிவித் திருந்தார்.

அதையடுத்து உயர் நீதிமன்றம், சிலருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும், சிலருக்கு விடுப்பு வழங்கியும் உத்தரவிட்டது.

இதற்கிடையே உயர் நீதிமன்றஉத்தரவுப்படி ஏற்கெனவே விடுப்பில் உள்ள 10 பேர் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீண்டநாட்களாக சிறையில் உள்ள ஷம்மா உள்ளிட்ட இருவருடைய விடுப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கேள்வி: அப்போது விடுப்பை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், நீண்டகாலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதுதொடர்பான பரிந்துரை ஆளுநர்முன்பாக நிலுவையில் உள்ளபோது, அவர்களை விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? என அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் கிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், இதுதொடர்பான கோப்புகள் ஆளுநர் முன்பாக மட்டுமே நிலுவையில் உள்ளது, தமிழகஅரசிடம் நிலுவையில் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள்,இதுதொடர்பாக விளக்கமளிக்க வும், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையி்ல் உள்ள வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், எனதமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in