தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை காலி செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தை காலி செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on

சென்னை: எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தங்கள் கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கி வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், தாம்பரம் காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த மனுவில், ‘புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகைக்கு வழங்கினோம். மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்பட்டது.

ஒப்பந்தப்படி, 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த தொகையை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தப்படுத்தியதால் பெற்றுக் கொண்டோம்.

குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டிடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக, 97 லட்சத்து 10 ஆயிரத்து 792 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுவரைக்கும் கட்டிடத்தை பயன்படுத்தியதற்காக அந்த தொகையை ஏற்றுக் கொண்டோம். எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம். எனவே, கட்டிடத்தை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளர், தாம்பரம் காவல் ஆணையர் ஆகியோர் வரும் மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in