

சென்னை: மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கவும், டெல்லி ஜந்தர்மந்தரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதில், கேரள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஏற்கெனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவின் முயற்சிகளுக்கு தமிழகம் துணை நிற்கும் என்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்போராட்டத்தில், தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நான் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுவிட்டு, நேற்றுதான் தாயகம் திரும்பினேன். அதன் காரணமாக, என்னால் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை.
கடந்த 7-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளார். தற்போது திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப்பகிர்வில் தங்கள் மாநிலத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதியிடம், “தமிழகத்தின் கோரிக்கைக்காக நீங்கள் ஒருமுறைகூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படியான சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழகத்தில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றித் தருவேன்” என்றார்.
மாநிலங்களையும், மாநில மக்களையும் மதிப்பவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளைப் போல நினைக்கிறார்.
மாநிலங்கள் இருப்பதோ, மாநிலங்களுக்கு முதல்வர்கள் இருப்பதோ அவருக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் குஜராத் முதல்வராக இருந்து, அதன்பின் பிரதமரானவர் அவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்ததுதான்.
மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது, ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியுடன் போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் போராடி வருகிறார்.
அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளும் மத்திய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால் மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்குக் கூட தடை ஏற்படுத்துகின்றனர்.
மாநிலங்களின் பொது செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டப்பேரவையின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. மாநிலஅரசிடம்தான் அனைத்து அன்றாடதேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதற்கு பாஜகஅரசு முட்டுக்கட்டை போடுகிறது.இதை எல்லோரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.
‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலம், இந்திய அரசைக் கைப்பற்றி, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும், சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.