Published : 09 Feb 2024 06:12 AM
Last Updated : 09 Feb 2024 06:12 AM
சென்னை: கிளாம்பாக்கத்தை மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 16 பேருக்கு பாமக தலைவர்அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றியதால், வெளியூர் செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையைமாற்றவும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை, அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையிலான, நவீனமான மண்டல போக்குவரத்து மையமாக (Regional Mobility Hub) மாற்ற வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே இடத்தில் நவீனமான முறையில் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பைப் போக்குவரத்து மையம் என அழைக்கின்றனர்.
நவீனமான முறையில் போக்குவரத்து மைய கட்டமைப்புகளை உருவாக்கும் நடைமுறை தற்போது உலகமெங்கும் பல்வேறு மாநகரங்களில் புகழ்பெற்று வருகிறது. இந்தியாவில் கொச்சி நகரில்இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு மண்டல போக்குவரத்து மையமாக கிளம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும்.
மக்களின் நல்வாழ்வுக்கு நன்மைபயக்கும் போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பது போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி (Transit Oriented Development - TOD) ஆகும். இதை மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளன.
மேற்கண்ட அறிவியல் பூர்வமான போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி வழிமுறைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மாறாக, குறுகிய பரப்பளவில் அதிகமான மக்கள் வசிக்கும்சூழலை உருவாக்குதல் என்கிறஒரே ஒரு போக்குவரத்து சார்ந்தவளர்ச்சிக் கருத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது; இந்த நிலை மாற வேண்டும்.
அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் பயணிகள் எளிதாகச் செல்வதற்கு இணைப்பு வசதிகள் இருக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எளிதில் அணுகும் வகையில் தரமான, இலகுவான நடைபாதைகளை அமைக்க வேண்டும்.
இது தவிரபல்வேறு வசதிகள் இடம்பெற வேண்டும். எனவே, மண்டல போக்குவரத்து மையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT