Published : 06 Feb 2024 06:11 AM
Last Updated : 06 Feb 2024 06:11 AM

கிளாம்பாக்கத்தில் ரூ.14.30 கோடியில் காவல் நிலையம்: கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் , பி.கே .சே கர்பாபு, ஆட்சியர் அருண்ராஜ், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பங்கேற்றனர். | படம்: எம்.முத்துகணேஷ் |

கிளாம்பாக்கம்: செங்கை மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 36 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை.ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள புதிய காவல் நிலையம் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தற்போது ரூ.14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த காவல் நிலையம், காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், இம்முனையத்தின் எதிர்புறம் உள்ள ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் (Sky Walk) கடந்த ஜன.31-ம் தேதி டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது.

மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் முகப்பு வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும். முடிச்சூரில் 5 ஏக்கரில் ரூ.27.98 கோடியில் ஆம்னி பேருந்துகளுக்காக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணியும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x