Published : 02 Feb 2024 06:06 AM
Last Updated : 02 Feb 2024 06:06 AM
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மாநகர பேருந்து நிறுத்த இணைப்பு பணி பிப்ரவரிக்குள்ளும், ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் மார்ச் மாதத்துக்குள்ளும் முடிக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிஎம்டிஏ வெளி யிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சிஎம்டிஏ சார்பில், இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிச.30-ம் தேதி திறந்து வைத்தார்.
இந்த பேருந்து முனையத்தை நகரத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப்பேருந்துகள் மூலம் 498 வழக்கமானபேருந்துகள் தவிர நெரிசல் மிகுந்தநேரங்களில் 200 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் 4,651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பேருந்து முனைய கட்டிடத்துக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து முனையத்துக்கும் இடையே 4 மினிபேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் கேட்டுக்கு இங்கிருந்து 2 மினி பேருந்துகள் கட்டண இணைப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும்கோயம்பேடு இடையே 5 நிமிடத்துக்கு ஒருமுறை சென்னை மாநகரப்போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், இம்முனையத்திலி ருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க.நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி மற்றும் பூந்தமல்லி, சிறுசேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இம்முனையத்தில் முன்பணம் செலுத்தப்பட்ட ஆட்டோ, வாடகை கார்கள் சேவையும் உள்ளது. மேலும்இந்த முனையத்தில் இருந்து ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் 1.5 கி.மீ தொலைவிலும், வண்டலூர் 2.1 கி.மீ தொலைவிலும் மற்றும் புதிதாக அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 500 மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கூடுதல் பணிகள் தீவிரம்: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில்நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே, பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலப் பணிகளுக்கு கடந்தஜன.31-ம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை மெட்ரோ ரயில் 3-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைய வுள்ளது.
இதுதவிர, பேருந்து முனையத்துக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்துக்கும் இடையே சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பிப்ரவரி மாதத்துக்குள் முடியும். வண்டலூர் மற்றும் அயனஞ்சேரி சந்திப்பை மேம்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை மூலம்மேற்கொள்ளப்பட்ட 3 சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலையத்துக்கு பிப்.5-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அணுகல் தன்மை தணிக்கைக் குழு அளித்த அறிக்கையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆம்னி பேருந்து நிலையம்: கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பில் 120 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான கட்டுமானப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிடம், குடிநீர், உணவகங்கள் மற்றும் கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தேவை யான அனைத்து வசதிகளும் செய் யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT