

கிருஷ்ணகிரி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளி முருகன் கோயிலில் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்ததால், வழக்கமான பாரம்பரியத்தை இழந்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆண்டு தோறும் தைப் பூசத் திருவிழாவின் போது, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் மெகா மாட்டுச் சந்தை 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில், மாடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும் தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் வருவது வழக்கம்.
5 ஆயிரம் மாடுகள்: இச்சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வரும். குறிப்பாக நாட்டின மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வரும். மேலும், மாட்டுச் சந்தை நடைபெறும் நாட்களில் இதை மையமாக வைத்துச் சிறு வியாபாரிகளுக்கு பல்வேறு பொருட்கள் மற்றும் ஒட்டல் வர்த்தகம் களைகட்டும். இதன் மூலம் ரூ.8 முதல் ரூ.10 கோடி வரையில் வர்த்தகம் நடக்கும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து மாட்டுச் சந்தை தனது வழங்கமான பாரம் பரியத்தை இழந்து வருகிறது.
நிகழாண்டி, கடந்த 26-ம் தேதி சந்தை தொடங்கிய நிலையில் நாளை ( பிப்.1-ம் தேதி ) நிறைவடைய உள்ளது. ஆனால், இந்தாண்டு மாடுகள் வரத்து குறைந்ததால் வழக்கமான பரபரப்பின்றி சந்தை வெறிச் சோடி காட்சியளித்து வருகிறது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உள்ளூரில் விற்பனை: இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: இந்தாண்டு சந்தைக்கு இதுவரை 100 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. ஒரு மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை அதன் தரத்துக்கு ஏற்ப விலை போனது. மாடுகள் வரத்து குறைந்ததால், இதை நம்பியுள்ள வியாபாரிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, உள்ளுரில் நடைபெறும் சந்தைகளில் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் போக்குவரத்து செலவுக்கு ஏற்ப மாடுகளுக்கு விலை கிடைக்காத நிலையாகும்.
குறைந்து வரும் பயன்பாடு: விவசாயத் தேவை மற்றும் செங்கல், மணல் உள்ளிட்ட சிறு பாரங்கள் ஏற்றிச் செல்ல மாட்டு வண்டிகளின் பயன்பாடும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், கடந்த காலங்களில் இருந்த விற்பனை இல்லை. மேலும், இதை நம்பி சந்தையில் கடை போட்டுள்ள மாடுகளுக்குத் தேவையான கயிறு, மணிகள் விற்பனை செய்யும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து வருவதால், வழக்கமான பாரம் பரியத்தை இழந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.