

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மகாராஜாகடையைச் சேர்ந்தவர் விவசாயி சாம்பசிவம்(55). இவர் இன்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து பூவகவுண்டன் ஏரி அருகிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 யானைகள் தாக்கியதில் சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, சாம்பசிவத்தின் சடலத்துடன், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மகாராஜாகடை பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் வனத்துறையினரும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ''இந்த பகுதியில் சுற்றி திரியும் யானைகளை விரட்ட, போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குற்றம் சாட்டினர்.
வனத்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போதும் அப்பகுதி மக்கள் ''ஏற்கெனவே கூறினோம், அப்படி இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை'' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர், ''இனி யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறோம்'' என்று உறுதியளித்ததையடுத்து, 9 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் பகல் 12.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதன் பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
2 ஆண்டுகளில் 5 பேர் உயிரிழப்பு: இதுகுறித்து மகாராஜாகடை கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி கூறும்போது, ''வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் தொடர்மழையால் நீர்நிலைகள் நிரம்பி செழிப்பாக உள்ளது. இதனால் இவ்வழியே ஆந்திரப் பிரதேச வனத்தை நோக்கிச் செல்லும் யானைகள் கூட்டம், அடிக்கடி பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் நாரலப்பள்ளி ஊராட்சியில் மட்டும் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்'' என்றார்